தெற்கு சீனாவில் வாகன முகப்பு விளக்குகளை அதிகமாக பிரகாசிக்கவிட்டு சென்றால் ஒரு நிமிடத்திற்கு அதே போன்ற பிரகாசமான விளக்குகளை ஓடுனர்கள் உற்றுப் பார்க்க வேண்டும். இப்படி ஒரி வித்தியாசமான தண்டனையை வழங்கி வருகின்றனர் சீன காவல்துறையினர்.
ஷென்ஸென் நகர போக்குவரத்து காவலர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கில் தங்களுடைய பிரசார நடவடிக்கையின் புகைப்படங்களை பதிந்துள்ளனர். ''நீண்ட தூரம் ஒளிக்கதிரை உமிழும் விளக்குகளை கொண்டு இன்று இரவு நாங்கள் தண்டனைகள் வழங்க உள்ளோம்'' என்ற அவர்களுடைய பதிவு, 87 ஆயிரம் விருப்பங்களை ( லைக்ஸ்) பெற்றுள்ளது.
மேலும், சுமார் 93 ஆயிரம் முறை அது பகிரப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களில், வாகனத்தின் முகப்பு விளக்குகள் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்க அதற்கு முன்னால் தண்டனை நபர்கள் நேரடியாக அமரவைக்கப்பட்டுள்ளனர்.
சில ஓட்டுநர்கள் 300 யுவான் வரை (44 டாலர்கள் )அபராதம் விதிக்கப்பட்டதாகவும், பின் முகப்பு விளக்குகளுக்கு முன்னால் 60 நொடிகள் அமர வைக்கப்பட்டதாகவும் அதிகாரபூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சில இணையதள செய்தி நிறுவனங்கள், இந்த முகப்பு விளக்கு தண்டனை அவர்களுடைய இஷ்டத்திற்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது; ஆனால், அபராதத்தை செலுத்திய பிறகு, அதற்கு மேல், ஏன் மக்கள் இந்த தண்டனையை தேர்வு செய்வார்கள் என்பது தெளிவாகப் புரியவில்லை.
2014 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு திட்டத்தை போலிசார் கையாண்ட போது பல விமர்சனங்களை எதிர் கொண்டனர். ஆனால், இருப்பினும் கடந்த செவ்வாய்கிழமை முதல் இந்த முயற்சியை மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ளனர். இந்த முறை, பொதுமக்களின் எதிர்வினை பெரியளவில் சாதகமாக உள்ளது. போலிசாரின் இந்த நடவடிக்கையை பார்த்து, மற்ற பல உள்ளூர் போலிஸ் படையினரும் தங்களுடைய சொந்த சமூக வலைத்தள பக்கங்களில் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், சினா செய்தி நிறுவனத்தின் முக்கிய தளத்தில் நடத்தப்பட்ட வாக்கு பதிவில் சுமார் 90% பேர் போலிசாரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.