ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் உரையுடன் ஆரம்பமாகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுடள்ளது.
அத்துடன் இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ளது.
இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள முதலாவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
மேலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 28 ஆம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் சார்பில் உரையாற்றவுள்ளார்.
இம்முறை கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளது. விசேடமாக கடந்த 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணையை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் எழுத்துமூல அறிக்கையை எதிர்வரும் 22 ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.
அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இலங்கை தொடர்பாக உரையாற்றவுள்ளனர்.
எதிர்வரும் இரண்டாம் திகதியும் 15 ஆம் திகதியும் ஐ.நா. விசேட நிபுணர்களின் இலங்கை தொடர்பான அறிக்கைகள் குறித்த விவாதமும் 23 ஆம் திகதி இலங்கை தொடர்பான பிரேரணை குறித்த விவாதங்களும் நடைபெறவுள்ளன. மேலும் 22 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
சிறுபான்மை மக்களின் விடயங்களை ஆராயும் ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் நாடியாவின் இலங்கை தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது தனது இலங்கை தொடர்பான அறிக்கையின் சுருக்கத்தை ஐ.நா. விசேட நிபுணர் ரீட்டா ஐசாக் மனித உரிமை பேரவையில் முன்மொழிவார். தொடர்ந்து உறுப்பு நாடுகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கும்.
சித்திரவதைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்வைத்த அறிக்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்திலும் இலங்கை தொடர்பாக சித்திரவதைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் வோன் மென்டோஸ் முன்வைத்த அறிக்கையின் பரிந்துரைகளை மேற்கோள்காட்டி உறுப்பு நாடுகள் உரையாற்றவுள்ளன.
இம்முறை கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் உயர்மட்ட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது. ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இலங்கை தூதுக்குழுவுடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.
இம்முறை இலங்கையின் சார்பில் முன்னேற்றங்களை வெ ளிப்படுத்த 18 மாத கால அகவாசம் கோரப்படவுள்ளது. அதாவது பேரவையில் நாளை உரையாற்றவுள்ள அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் மற்றும் தேசிய ஒற்றுமையை பலப்படுத்துதல் ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.
அத்துடன் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுக்கவுள்ளார்.
இதேவேளை 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையை அமுல்படுத்துவதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்கும் வகையிலான பிரேரணை ஒன்று பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ளது.
அதாவது இலங்கைக்கு நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுக்க மேலும் கால அவகாசத்தை வழங்கும் நோக்கிலேயே இவ்வாறு பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்த பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடைபெறும். இலங்கை அதற்கு இணை அனுசரணை வழங்கினால் ஒருவேளை வாக்கெடுப்புக்கு விடப்படாமல் கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றதைப் போன்று ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்படலாம்.
மேலும் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்பான அறிக்கையிலும் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுக்க இலங்கைக்கு கால அவகாசத்தையும் பிரேரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை அடியொட்டியதாகவே பிரிட்டன் கொண்டுவரவுள்ள பிரேரணை அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. "
பல்வேறு நாடுகள் பங்கேற்பு
கூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்திரேலியா, சுவிடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள நிலையில் அவர்கள் இலங்கை விகவாரம் தொடர்பிலும் பிரஸ்தாபிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டென்மார்க்கின் வெளிவிவகார அமைச்சர் அன்டஸ் சாமுவேல் சென், நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் பேர்ட் கொன்டஸ், கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிரிஸ்டியா பீரிலன், பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் மார்க், பிரிட்டனின் உள்ளிட்டோரும் உரையாற்றவுள்ளனர்.
சுவீடனின் வெளிவிவகார அமைச்சர் மாகட் வோல்ஸ்ட்ரோம், பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் பற்றீசியா ஸ்கொட்லன்ட், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பீட்டர் மோரேர் ஆகியோரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
இதேவேளை சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித கண்காணிப்பகம் என்பன இம்முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் பல யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை இந்த அமைப்புக்கள் முன்வைக்கும் என கூறப்படுகின்றது. எனினும் அரசாங்கம் கால அவகாசத்தையே கோரும் என கூறப்படுகின்றது.