உள்ளகப் பொறிமுறை இலங்கையில் தோல்வியடைந்து விட்டது. பன்னாட்டுப் பிரசன்னத் தையேமக்களும் கோருகின்றனர். உலகின் எந்த நிலைமாற்றுக்கால பொறிமுறையும் வெற்றியடைவதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவு அவசியம். அவர்கள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின் சூகா தெரிவித்தார். பன்னாட்டு ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீமூனால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவில் சூகாவும் ஒருவராவார். பன்னாட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளராகவும் இவர் விளங்கு கிறார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நிலைமாற்றுக்கால நீதி தொடர்பில் இலங்கை அரசு கடந்த இரண்டு வருடங்களில் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது அதிர்ச்சியளிக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்செயல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சிறிசேன அரசு தவறிவிட்டது. காணாமற்போனவர்கள் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டவரைவு கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டது.
ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அந்த அலுவலகத்தை இன்னமும் ஏற்படுத்தவில்லை. பெருமளவு சிங்க ளவர்களை நியமிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்குச் சிந்திக்க வேண்டும். உலகின் எந்த நிலைமாற்றுக்கால பொறிமுறையும் வெற்றியடைவதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவு அவசியம். அவர்கள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். பத்தாண்டு கால வன்முறைகள் அரசு மற்றும் அதன் அமைப்புகள் மீதான அதிருப்தியும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.
பலர் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பன்னாட்டுப் பங்களிப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.நம்பகத்தன்மை மிக்க உள்ளகப் பொறிமுறையென்பது முரண்பாடுகளைக் கொண்டது. அவை அனைத்தும் இலங்கையில் தோல்வியடைந்து விட்டன.
இலங்கை தொடர்பான பன்னாட்டு அணுகுமுறை 180 பாகையில் திரும்பியுள்ளது. முன்னர் ராஜபக்ச அரசின் காலத்தில் இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து சகிப்புத்தன்மையும் விரக்தியும் காணப்பட்டன. தற்போது இலங்கைக்கு மேலும் கால அவகாசத்தை வழங்குவதற்கான பொறுமை காணப்படுகின்றது.
நாட்டில் நிலவும் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதென்றால் தற்போது அச்சமற்ற சூழல் காணப்படுகின்றது. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு செயற்படுவதற்கான சூழல் காணப்படுகின்றது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு நம்பகத்தன்மையுள்ள தலைமை காணப்படுகின்றது. இன்னமும் திறன் போதாத நிலை காணப்படுகின்றது. தெற்கில் நிலமை முன்னேற்றமடைந்துள்ளது.
முன்னர் போர் நடைபெற்ற பகுதிகளில் தமிழர்கள் தொடர்ந்தும் இராணுவமயப்படுத்தப்பட்ட பாதுகாப்புமயப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்கின்றனர். இந்தச் சூழலில் கண்காணிப்பும் அச்சுறுத்தலும் நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாகக் காணப்படுகின்றது.
போர் முடிவடைந்து எட்டு வருடங்களின் பின்னர் இத்தனை தூரம் இராணுவமயப்படுத்தப்பட்ட சூழல் காணப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது படையினர் தொடர்ந்தும் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட்ட நிலையில் செயற்படுகின்றனர் என்பதையும் வெளிப்படுத்துகின்றது.
சிறிசேன அரசு பெரும் நம்பிக்கை மாற்றத்துக்கான நல்லெண்ணத்துடனேயே ஆட்சிக்கு வந்தது. இந்த அரசுக்கு வாக்களித்த தமிழர்களிடம் இந்த நம்பிக்கை காணப்பட்டது. அதிர்ச்சிதரும் வகையில் இரண்டு வருடங்களாக எந்தவிதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. இலங்கை கடந்த காலத்திலிருந்து ஏன் மாற்றமடைய வேண்டும் என்பதற்கான தெளிவான நோக்கத்தை ஏற்படுத்த அரசு தவறிவிட்டது என்றார்.