இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவுக்கு இதுவரை 12 நாடுகள் தமது இணை அனுசரணையை வழங்கியிருக்கின்றன.
அந்தவகையில் இன்னும் சில தினங்களில் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ள நிலை யில் அதிகமான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனுசரணை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஒருசில உறுப்பு நாடுகளும் உறுப்புரிமையற்ற சில நாடுகளும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றன.
அந்தவகையில் அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான், மொன்ட்னேகுரோ, நோர்வே, மெஸடோனியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தன. மேலும் இந்த பிரேரணையுடன் சம்பந்தப்பட்ட நாடான இலங்கையும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
அந்தவகையில் இலங்கை தொடர்பான பிரேரணையானது இம்முறையும் வாக்கெடுப்பின்றி ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரேரணையானது இலங்கை, 2015 ஆம் ஆண்டு பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை இலங்கையில் ஊக்குவித்தல் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு வரை 2015 ஆம் ஆண்டு பிரேணையை அமுல்படுத்த கால அவகாசமும் வழங்கியுள்ளது.
இதேவேளை நேற்று முன்தினம் ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகள் இன்றி உள்ளகப் பொறிமுறையின் மூலம் விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில் இலங்கை பிரேரணைக்கு மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கவேண்டுமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பதற்கான இந்தப் பிரேரணைக்கு உறுப்புநாடுகள் இணை அனுசரணை வழங்கவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.