சல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இதனிடையே சல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.
தற்போது சல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.
அந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.