மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருகனும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளருமான அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட ஏனைய பணிப்பாளர்களைக் கைதுசெய்யுமாறு, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிறுவனம், முறைகேடான முறையில் இலாபமீட்டியுள்ளதாகவும் அதன் மூலமாக நிறுவனத்தில் பணிப்பாளர்கள், குற்றமிழைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களைக் கைதுசெய்து, குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், கோப் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில், நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை கூடிய போதே, இவ்வாறான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.