கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை பகுதியில் பொலிஸ் ரோந்து பிரிவினர் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான முன்னாள் போராளி ஒருவரை கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை கச்சார் வெளிப் பகுதியில் ரோந்து செல்லும் பொலிஸாரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு 12.31 மணியளவில் இடம்பெற்ற இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸார் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத் துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் பொலிஸார் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் அருகில் இருந்த ரயில்வே சமிக்ஞ்ஞை செயற்பாட்டு அறையின் கதவுகள் சேதமடைந்தது.
இச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளினூடாக நேற்றுமுன்தினம் இரவு முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் உரும்பிராய் ஞான வைரவர் கோவிலடியை சேர்ந்த கிருபானந்தன் கணேசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு இவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் இவரை கைது செய்துள்ளார்கள். குறித்த நபர் வவுனியாவை சொந்த இடமாக கொண்டிருந்ததாகவும், யாழ்.உரும்பிராயில் தற்காலிகமாகவே வசித்து வந்ததாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் முற்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.