சென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.
சனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.
காரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.
தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.
கார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
27 வயதாகும் அஸ்வின் சுந்தர் தேசிய கார் பந்தையங்களில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதோடு, இருசக்கர வாகன போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.
2008ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த மா கோன் மோட்டர்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஜெர்மன் ஃபார்முலா ஃபோக்ஸ்வாகென் ஏடிஏசி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார் அஸ்வின்.
அவரது மனைவி நிவேதிதா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.