திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையில் இலங்கை-இந்தியா இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தியை இந்தியா வசம் ஒப்படைக்க இலங்கை-இந்திய அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, டெல்லி சென்றுள்ள அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை சீனா வசம் ஒப்படைத்திருக்கும் நிலையில், சீனா மற்றும் இந்தியாவுடன் சமமான உறவு நிலையைக் கடைப்பிடிக்க எண்ணியே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
ஆயினும், இந்தத் தகவலை மறுத்திருக்கும் இந்தியா, இதுபோன்ற சம உறவு முறையைக் கடைப்பிடிப்பதற்காக ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களில் தான் ஆர்வம் காட்டுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தில் ஒப்பந்தங்களை மேற்கொள்வதனால் நீண்ட கால அடிப்படையில் பெரும் நன்மைகள் கிட்ட வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை இந்தியா மறுத்ததான் பின்னரே அது சீனாவுக்கு வழங்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.