ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகத்துக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டமையைப் போன்று, சகல அதிகாரங்களையும் வழங்கும் வகையில் யாப்பில் மாற்றம் கொண்டுவருவதாகவும், கட்சியின் அனைத்து அதிகாரமும் கொண்ட செயலாளராக மன்சூர் எ காதரை நியமிக்கவுள்ளதாகவும் தாருஸ்ஸலாத்தில் நேற்றிரவு நடைபெற்ற கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தரும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இன்றைய இந்த மாநாடு தீர்க்கமான ஒன்றாக அமையவுள்ளது. இந்த மாநாட்டில் முன்வைக்கவுள்ள முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் நேற்றைய, கட்டாய அதியுயர்பீடக் கூட்டத்தின் போது ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, கட்சியின் தவிசாளர் பதவியை ஹசன் அலியை ஏற்றுக்கொள்ளுமாறு, மு.காவின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உட்பட அதியுயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதான வேண்டுகோளை விடுத்திருந்ததாகவும் அதனை ஏற்றுக்கொள்ள ஹசன் அலி மறுத்துவிட்டதாகவும் தெரியவருகின்றது. கட்சியை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் கூறி, தவிசாளர் பதவியிலிருந்து கடந்த 4ஆம் திகதி, பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.