சொந்த நிலங்கள் மீண்டும் கிடைக்கும் வரைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனா்.
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பன்னிரண்டாவது நாளாக தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா்.
இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின் தாக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் தமது சொந்த இடத்திற்கு வெல்வதில் உறுதியாக உள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு வருடங்களை கடந்த போதும் தங்களின் சொந்த விவசாய நிலங்கள் இல்லாது இருப்பது அவா்களின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே தங்களின் சொந்த நிலங்களை தவிர தங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்பதில் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் மிகவும் உறுதியாக உள்ளனா்.
அத்தோடு சொந்த நிலங்கள் இன்மையால் மீள்குடியேற்றத்திற்கு பின்னரான அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பல உதவி திட்டங்களையும் தாம் இழந்து நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமது நிலமே தமக்கு வேண்டும் என உறுதியாக உள்ள மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகி ன்றனர்.