தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனால் லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து கூறிவந்தார்.
அத்துடன அப்பல்லோ போய்விட்டு வந்த அதிமுக தலைவர்களும், ஜெயலலிதா நன்றாக குணமடைந்துவிட்டார்; வீடு திரும்புகிறார் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது. இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ரத்தநாள அடைப்பைப் போக்கும் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாகிவிட்டது எனவும் கூறியிருந்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதிமுக தலைமை அலுவலகத்திலேயே கூட அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. பின்னர் மாலை 5.45 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருவதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனை இதை உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் காவலராக விளங்கிய எங்கள் தலைவியை நாங்கள் இழந்துவிட்டோமே என கண்ணீரும் கம்பலையுமாக அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூடியுள்ளனர். தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.