ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுலாக்க இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டுமென பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய இராஜ்யத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆலோக் ஷர்மா கருத்து வெளியிடுகையில்,
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமைகள் பேரவையுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் அமைச்சர் மட்ட கூட்டத் தொடரில் அவர் ஐக்கிய இராஜ்யத்தில் அறிக்கையை வாசித்த நிலையில், பேரவையின் அமர்வுகள் நடைபெறும் ஜெனீவா நகரில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றையும் நிகழ்த்தினார்.
போர்க்குற்ற அரசிற்கு மேலும் கால அவகாசம் தேவை என பிரிட்டன் வக்காலத்து வாங்கியதன் மூலம் மீண்டும் தனது உண்மை முகத்தினைக் காட்டியுள்ளது. பிரிட்டனைக் குறைகூறி என்ன பலன், தாயகத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படி ஏமாற்று அரசியல் செய்கின்றதோ அதே பாணியில்தான் இங்கு பிரித்தானிய தமிழர் பேரவை , உலகத்தமிழர் பேரவை ஆகியோர்கள் ஓர் குட்டி தமிழ்த்தேசஇயக் கூட்டமைப்பாக பார்க்கப்படுகின்றார்கள். பிரிட்டன் கருத்து தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை மாறாக அமைதியாக இருக்க செய்திருந்தாலேயே ஆரோக்கியமாக இருந்திருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக முடிவு எடுத்ததும் அதற்கு பதிலாக பொருளாதார வணிக உடன்பாடுகளை பலப்படுத்த பொது நலவாய நாடுகளுடனான உறவினை பலப்படுத்தப்போவதாக பிரிட்டன் கூறியதும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தினை உண்டுபண்ணும்.
அதாவது பிரிட்டன் அரசுகளுடனான உறவுகளை ஸ்திரமாக வைத்திருக்கவே உதவும் அதற்காக மனித உரிமை தொடர்பான விடயங்களை அது புறக்கணிக்க தயாராகவே உள்ளது. சுருக்கமாக கூறப்போனால் பிரிட்டன் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததையே மீண்டும் செய்ய தொடங்குகின்றது என்பது எல்லோருக்கும் புரியும்.