அம்பாறையில் இறக்ககாமம் பகுதியில் மாணிக்கமடு கிராமத்தின் அருகே, மாய க்கல்லி மலை மீது அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை திடீரென வந்த பௌத்த பிக்குகளைக் கொண்ட ஒரு குழுவினரால், தமிழ்க்கிராமமான மாணிக்கமடுவை அடு த்த மாயக்கல்லி மலை மீது புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது.
அந்தப் பகுதியில் பௌத்தர்கள் எவரும் வசிக்காத நிலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது அந்தப்பகுதியில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களிடையே அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து, அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குத் தெரியப்படுத்தப்பட்டதுடன் அவர் அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, ஆராய்வதற்கு நேற்று அம்பாறை மாவட்டச் செயலகத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கு, இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், இந்து ஆலய நிர்வாகிகள் மற்றும் புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் , முஸ்லிம் தரப்புகள் பௌத்தர்கள் அல்லாத இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொருத்தமற்றது என்றும், இதனால் எதிர்காலத்தில் பின் விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால், அதற்கு பௌத்த பிக்குகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இறக்காமம் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சிக்குரிய 19 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், இந்த விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு காணும் நோக்கில், தமிழ், முஸ்லிம், பௌத்த பிக்குகள் மற்றும் சிவில் அதிகாரிகளை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழுவொன்று அரசாங்க அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.இந்தக் குழு இன்று கூடி ஆராயவுள்ளது.