கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக முன்றாம் வருட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மாணவர்கள் மத்தியில் பல எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. இந்த படுகொலைகள் தொடர்பில் மாணவர்கள் ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கூடாக மட்டுமே தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இவ்வாறு யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ட ஆசிரியர் விஜயகுமார் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை யாழ் பல்கலையில் நடைபெற்ற விசேட பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த படுகொலை சம்பவத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளார். மற்றைய மாணவனின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆயினும் மாணவர்கள் அதை கொலை என்றே நம்புகின்றனர். ஏனெனில் தூப்பாக்கிப் பிரயோகத்திற்கு பின்னர் நடைபெற்ற செயற்பாடுகள் மேலும் சந்தேகங்களை கிளப்பியுள்ளன.
இவ்விரு மாணவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது விபத்து நடந்ததாகவே பொலிஸார் தெரிவித்தனர். எனவே, தூப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்ட தடயங்களை அழிப்பதற்காகவே இரண்டாவது மாணவன் கொலை செய்யப்பட்டிருக்கலாமென மாணவர்கள் கருதுகின்றனர்.
மேலும், பொலிஸார் மருத்துவ அறிக்கை வந்ததன் பின்னரே இறந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து இச்சம்பவம் தொடர்பாக வருந்துவதாகவும் மாணவர்களின் இறுதிச் சடங்கிற்குரிய செலவினை தாம் முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர். பல்கலை மாணவர்கள் தமது நண்பர்களை இழந்திருந்தாலும் மிகவும் நிதானமான முறையில் ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அந்தவகையில், யாழ் மாவாட்ட செயலக முற்றுகை, பல்கலைக்கழக செயற்பாடுகள் முடக்கம் ஆகியன அமைந்திருந்தன எனவு சிரெஷ்ட ஆசிரியர் தெரிவித்துள்ளார்.