கடந்த யுத்த காலத்தில் 45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர்? தமிழ் மக்கள் மாத்திரமல்ல. 45 முஸ்லிம்களும் மாவீரர்களாகியுள்ளனர். ஆகவே தமிழ் பேசும் மக்கள் மாவீரர்களாக இருந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தியாகத்தை மேற் கொண்டிருக்கின்றார்கள்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் ஒருவர் மரணித்த பின் அவருக்கு அஞசலி செலுத்த முடியும். ஆனால் மாவீரர்களுக்கு கட்டாயம் அஞ்சலி செலுத்த வேண்டும்.
தமிழ் மக்களுக்காக தமது உயிரை துச்சமாக நினைத்து அவர்கள் போராடியவர்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது நமது கடமையாகும்.பல உயிர்கள் நியாயமான விடுதலைக்காக தங்களை தியாகம் செய்து இருக்கின்றன.
ஆனால் இங்கு ஆட்சி செய்த அரசாங்கங்கள் தான் தியாகங்களை சரியாக மதிக்க வில்லை. போர் எண்பது ஒரு நாடு இன்னுமொரு நாட்டின் மீது செய்வதுதான் போராகும்.
ஆனால் உள்நாட்டில் மக்கள் உரிமைக்காக போராடுவது போராக கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் மாத்திரமல்ல பல நாடுகளில் நடைபெற்றுள்ளது.
நாங்கள் தமிழர்கள் தமிழர் யார் என்பதனை உலகுக்கு காட்டியுள்ளார்கள். ஒரு தாய் இன்னொரு தாயிடம் எங்கே உன் மகன் எனக் கேட்ட போது அந்த தாய் புலி கிடந்த குகை இது என் மகன் போர்க்களத்தில் நிற்பான் என கூறிய அந்த வீரத்தாய்மார் இந்த வீர வித்துக்களை ஈன்று இன்று மண்ணுக்கு வித்துடல்களாக ஆக்கி எமது எதிர்காலத்திற்காக மாபெரும் வித்திட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.