தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாயக உறவுகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு ஒருமித்து கோஷங்களை எழுப்பினர்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட குறிப்பாக இளைஞர்களினால் வலியுறுத்தி கூறப்பட்டது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எதிர்வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் வெளியிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.