முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் இலண்டனுக்கு சென்றமை தொடர்பில் அரசியல் சட்டத்தை மீறியுள்ளதாக சிங்கள அரசு கூறியுள்ளது.
இதேபோன்று, தற்பொழுது பதில் முதலமைச்சராக கடமையாற்றுபவரும் வடக்கு ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லையெனவும் ஆளுனர் செயலகம் கூறுகின்றது.
வட மாகாண முதலமைச்சர் கடந்த 14 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதியான இன்று வரை வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது விஜயம் முடியும் வரை பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ளதனால், கடந்த 15 ஆம் திகதி கூடிய வட மாகாண சபைக் கூட்டத்தின் போது சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானமினால், கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இவர், இதுவரை வட மாகாண ஆளுநர் முன்னிலையில் பதில் முதலமைச்சராக பொறுப்புக்களைப் பாரமெடுக்காதுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின், ஆளுநரின் அனுமதியைப் பெற்று, பதில் ஒருவரை நியமித்து விட்டு, அவ்வாறு நியமிக்கப்பட்டதனை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தான் வெளிநாடு செல்ல முடியும். இருப்பினும், இந்த நடைமுறைகளை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளதாக ஆளுனர் செயலகம் கூறியுள்ளது.