சசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு "சிறை" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.
இதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.
எம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.
இன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.