மாணவர்கள் படுகொலை தொடர்பிலான விசாரணை பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படும் என மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியுள்ளார்.
மாணவர்கள் கொல்லப்பட்டபோது வடபகுதி மக்கள் அமைதியாக செயற்பட்டதாகவும் அதற்காக தான் நன்றி தெரிவித்துக் கொள்வ தாகவும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்து ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கிலுள்ள இடம்பெயர் முகாம் மக்களுக்காக கீரிமலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, யாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலை குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டார்.
'அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது மரணம் சம்பவித்தது. இந்த சம்பவத்தை அடுத்து நீதியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் உட்பட உயரதிகாரிகளுக்கு நான் பணிப்புரை விடுத்தேன். மேலும் விசேட விசாரணைக் குழுவொன்றையும் நான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியிருந்தேன். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதை அறிவோம்.
இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றேன். விசேடமாக சக மாணவர்களது மரணம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களது மனதை தாக்கியுள்ளது. எமது நாட்டில் மக்கள் தமது சுதந்திரத்தையும், உரிமைகளையும் ஜனநாயக ரீதியாக பயன்படுத்துகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு மக்கள் அமைதியாக செயற்பட்டதை இட்டு அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருக்க அனைவரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். அதேபோன்று இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகையில் ஊடகங்கள் செயற்படுகின்ற விதம் குறித்து நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எமது நாட்டு மக்களின் மனங்களில் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். எமது நாட்டு இனங்களுக்கு இடையே பிளவு ஏற்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. இறுதியில் அது யுத்தமாக உருவெடுத்தது.
30 வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம். நம் அனைவருக்கும் இதில் பயணித்த அனுபவம் இருக்கின்றது. அதனால் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகின்றது. அதற்கான சிறந்த தருணம் இதுவே என்று நான் கூறுகின்றேன். இதுபற்றி பலர் பலவிதமாக அரசியல் வியாக்கியானங்களை கூறுகின்றனர். இந்தப் பிரச்சினையை அவர்கள் குறைவாக மதிப்படுகின்றனர். எனினும் இவை அனைத்தும் குறைமதிப்பிடவும், குறை பெறுமதியிடப்படவும் முடியாத ஒன்றாயிருக்கின்றது' - என்றார்.
இதேவேளை மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்காத வகையிலும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான அரசியலமைப்பை உருவாக்கும் சவாலை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி இதன்போது சூளுரைத்தார்.
'கடந்த 50,60 வருடங்களான எமக்கு அனுபவம் இருக்கின்றது. எனவே இப்படியான சந்தர்ப்பத்தினால்தான் நாடு என்ற அடிப்படையில் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாட்டின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான அரசியலமைப்பை நிறைவேற்ற எதிர்பார்க்கின்றோம்.
புதிய அரசியலமைப்பு வரைபுபடுத்தி வெளியிடுவதற்கு முன்னரே பலர் பிழையான வகையில் விமர்சிக்கின்றனர். விசேடமாக மகாநாயக்கர்களையும், பிக்குமார்களையும் விகாரை தோரும் சென்று பிழையான கருத்துக்களை விம்பத்தை விதைக்கின்றனர். பௌத்த மதத்திலேயே கைவைக்கின்றோம் என்றும் கூறுகின்றனர். அதேபோன்று நாட்டை காட்டிக்கொடுக்கவும், யுத்தத்தில் மீட்கப்பட்ட இந்த நாட்டை பிளவுபடுத்தவும் முயற்சிக்கின்றோம் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நான் முற்றாக நிராகரிக்கின்றேன். சிலர் உலகத்திலுள்ள சில நாடுகளில் காணப்படுகின்ற அரசியலமைப்புக்களை சுட்டிக்காட்டி பேசுகின்றனர்.
ஆனாலும் வேறு நாடுகளில் உள்ள அரசியலமைப்புக்கள் எமக்குத் தேவையில்லை. மாறான எமது நாட்டிற்குப் பொருத்தமான ஒன்றையே தயாரிக்க வேண்டும். நாங்கள் இந்த சவாலை வென்றுகொள்ள வேண்டும். இந்த பூமியில் மீண்டும் இரத்த ஆறு ஓடக்கூடாது. எனவே அனைத்து ஊடகங்களும் சரியானதை மக்களிடையே கொண்டுசெல்ல பொறுப்புடன் செயற்பட வேண்டும்' - என்றார்.