கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நள்ளிரவு , கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷன் (வயது 24) ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தையடுத்து, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31), பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் நடவடிக்கையில், மாணவர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களையும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (01) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந் நிலையில் ஜனாதிபதியை சந்தித்த 16 மாணவர்களும், தங்கள் கோரிக்கைகளை, ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். இதன்போது, குறித்த விவகாரம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள் விசாரணையை முடிவுறுத்தி, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதற்கு, நீதித்துறையிடம் கோரிக்கை முன்வைப்பதாக, ஜனாதிபதி உறுதியளித்ததோடு, இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும், ஜனாதிபதி கூறினார். அத்தோடு கொலை செய்யப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு, தலா 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என, மாணவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உண்மையில் பாதிக்கப்பட்ட மாணவ குடும்பங்களுக்கு ஒருவாரத்துக்குள் முடிவு கிடைக்குமா? அல்லது நீதி கிடைக்குமா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ஏனென்றால் கடந்த காலல்ங்களில் சிங்கள நிர்வாகம் எந்தவொரு நிதியான நடவடிக்கைகளையும் செய்யவில்லை மாறாக குற்றம் செய்தவர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளையே செய்து வந்துள்ளது.