Super User Written by  Oct 15, 2016 - 5325 Views

டொனால் ட்ரம்பின் செல்வாகு வீழ்ச்சி Featured

2005ம் ஆண்டு டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவின் போது, செட்டுக்கு வெளியே பேசிய ட்ரம்பின் கொச்சைப் பேச்சு வீடியோ, அமெரிக்க அதிபர் தேர்தலைப் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வெளியானது முதல் படு மோசமான தோல்வியை நோக்கி ட்ரம்ப் போய்க்கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் மூல காரணம் புஷ் குடும்பமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ட்ரம்பும் புஷ் குடும்பமும் குடியரசுக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ்ஷும் களத்தில் இருந்தார். அவரை 'சக்தி இல்லாதவர்' என்று மிகக் கடுமையாக விமரிசித்தார் ட்ரம்ப். மேலும் அவரது அண்ணன் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கையாலகாதனத்தால்தான் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது.

அமெரிக்கர்களுக்கு புஷ் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டினார். அதிபர் வேட்பாளர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட ஜெப் புஷ், ட்ரம்பின் அதிரடிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் சீக்கிரமாகவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

குடும்பத்தில் தந்தை மகன் என இரண்டு முன்னாள் அதிபர்கள் இருந்தும், ட்ரம்புக்கு ஆதரவு தர மறுத்து விட்டனர். சீனியர் புஷ் ட்ரம்புக்கு எதிராக வாக்களிப்பேன் என்று சொன்னதாக தகவல் உலவுகிறது. தற்போது வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய வீடியோவில் உடன் இருந்து ட்ரம்புடன் பேசுபவர் டிவி தொகுப்பாளர் பில்லி புஷ்.

இவர் ஜெப் புஷ், ஜார்ஷ் புஷ் சகோதரர்களின் சித்தப்பா மகன், சீனியர் புஷ்ஷின் தம்பி பையன் ஆவார். வீடியோ குறித்து கூறுகையில், 'அப்போது நான் வயதில் சிறியவன், முதிர்ச்சியற்ற நிலையில் இருந்தேன் மன்னிப்புக் கோருகிறேன்," என்று பில்லி அறிக்கை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ இப்போது ஏன் எப்படி வெளியானது? வீடியோ வெளியான நேரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. என்பிசி தொலைக்காட்சியின் பழைய பதிவுகளில் இருந்து சிறப்பு நிகழ்ச்சிக்காக இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள். அவர்கள் நிகழ்ச்சி வெளியாகும் முன்னதாகவே வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டு சர்சையை கிளப்பிவிட்டது. வாஷிங்டன் போஸ்ட்க்காக செய்தி வெளியிட்ட டேவிட் ஃபேரன்தோல்ட், 'வீடியோவை கசியவிட்டவர் யாரென்று தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார்.

புஷ் குடும்பத்திற்கும் இந்த வீடியோ வெளியானதற்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை. அதே சமயத்தில் எதிர்கட்சியின் ஹிலரி புஷ் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஹிலரி தங்கள் வீட்டு மருமகள் போன்றவர் என்று ஜார்ஜ் புஷ் முன்னர் தெரிவித்திருந்தார். சீனியர் புஷ்ஷை தோற்கடித்த பில் க்ளிண்டனை தன்னுடைய மகன் போன்றவர் என்று அவர் கூறியிருக்கிறார். இரு குடும்பதிற்கிடையேயும் உள்ள நெருங்கிய நட்பு இன்றும் தொடர்கிறது. இருவருக்கும் பொது எதிரி ட்ரம்ப் என்ற நிலையும் உருவாகிவிட்டது. இந்த வீடியோ வெளியீட்டில் ஒருவேளை புஷ் குடும்பத்தின் பின்னணி இருக்குமோ என்ற கேள்வியும் எழுகின்றது.

அடுத்தடுத்த சரிவு.. ஞாயிற்றுக்கிழமை நடந்த.இரண்டாம் விவாதத்தில், பில் க்ளிண்டனுக்கும் பெண்களுக்கும் உள்ள பழைய பிரச்சனைகளை கிளப்பி திசை திருப்பப் பார்த்தார் ட்ரம்ப். அதை சட்டை செய்யாமல், 'அவர்கள் தாழ்ந்து போனால் நீங்கள் உயரே போங்கள்' என்ற மிஷல் ஒபாமாவின் முழக்கத்தைக் கூறி, தனது அரசின் திட்டங்கள் பற்றி பேசினார் ஹிலரி. விவாதத்தில் ஹிலரி வெற்றி பெற்றார் என்று அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன.

அடுத்தடுத்த நாட்களில் பெண்கள் பற்றிய ட்ரம்பின் அருவருக்கத்தக்க முந்தைய ரேடியோ பேச்சுக்கள் வெளியானது. இரண்டு பெண்கள், ட்ரம்ப், தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்று குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இந்த செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார். வழக்கை எதிர் கொள்ளத் தயார் என்று நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

மிஷல் ஒபாமாவின் உணர்ச்சிமயமான பேச்சு, நாடெங்கிலும் கட்சி பாகுபாடுன்றி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிபர் ஒபாமாவும் தேர்தல் களத்தில் இறங்கி ட்ரம்பை வெளுத்துக் கட்டுகிறார். வழக்கமான குடியரசுக் கட்சி மாநிலங்களில் கூட ஹிலரியும் ட்ரம்பும் சம நிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. நாடு தழுவிய கருத்துக் கணிப்பில் ஹிலரி பெரும் வித்தியாசத்துடன் முன்னணியில் இருக்கிறார். பால் ரயன், ஜான் மெக்கய்ய்ன், மிட்ச் மெக்கனல் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் ட்ரம்புக்கு ஆதரவை விலக்கிக் கொண்டனர். செனட் வேட்பாளர்கள் ட்ரம்பிடம் இருந்து விலகியே பிரச்சாரம் செய்கிறார்கள். ட்ரம்புக்கு இன்னும் வாய்ப்புள்ளதா? பெண்கள், லத்தீன் இனத்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வாக்கு வங்கியை இழந்து, சொந்த கட்சித் தலைவர்களும் கைவிட்டு விட்ட நிலையில், மொத்த வாக்குப்பதிவு குறைந்தால் ட்ரம்புக்கு ஒரு வேளை வெற்றி வாய்ப்பு இருக்கலாம்.

ட்ரம்பின் தற்போதைய நடவடிக்கை அதை நோக்கித் தான் இருப்பதாக தெரிகிறது. மூர்க்கத்தனமாக ஊடகங்கள், கட்சித்தலைவர்களை தாக்கிப் பேசி வருகிறார். நடுநிலை வாக்காளர்களை வெறுப்பின் உச்சத்திற்கு தள்ளி, வாக்களிக்க வரவிடாமல் தடுக்கலாம் என்ற உத்தி போல் தெரிகிறது. விக்கிலீக்ஸ்-ம் ஹிலரி தரப்பு பற்றி தினம் தோறும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.அவற்றில் ஏதாவது பெரிய விவகாரம் வெடித்தாலும், ட்ரம்ப் பக்கம் காற்று திரும்பலாம். கட்சி ஓட்டுகளை சிதறாமல் வைத்து, எதிர்தரப்புக்கு வாக்கு பதிவாகமல் தடுப்பது ஒன்று தான் ட்ரம்புக்கு இருக்கும் ஒரே வழி. அது கொக்குக்கு வெண்ணை வைத்து பிடிப்பது போன்ற கதைதான். விரைவில் அமெரிககாவின் முதல் பெண் அதிபராக ஹிலரி க்ளிண்டன் வெற்றி பெற்றார் என்ற செய்தி வரும் என்று நம்பலாம்.
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…