செளதி தலைமையிலான கூட்டணி படையினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, இத்தாக்குதலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது.
"கோப எரிமலை" என்றழைக்கப்பட்ட இந்தப் பேரணியில் , செளதி எதிர்ப்பு வாசகங்களை ஆயிரக்கணக்கான ஏமன் மக்கள் முழக்கமிட்டனர்.
சனிக்கிழமையன்று, சனாவில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டது.
500க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஹூதி போராளிகளுக்கு எதிராக அதிபர் அப்தராபா மன்சூர் ஹேடியின் ஆதரவோடு கடந்த ஆண்டு செளதி ராணுவ தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட மிக மோசமான வான்வழித்தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.