அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு களங்கள் நாளை திறக்கப்பட்டு வாலை முறுக்கியபடி காளைகள் நாளை சீறிப்பாய உள்ளன. அதை மீசை முறுக்கிய தமிழ் காளைகள் பாய்ந்து அடக்க உள்ளனர். உலகமே தமிழர்கள் ஒற்றுமையையும், போராட்ட குணத்தையும் பார்த்து வியக்கும்.
ஆம்.. ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கையோடு, மேற்கண்ட மூன்று ஜல்லிக்கட்டு களங்களிலும் உள்ளாட்சி ஊழியர்கள் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தும் வேலையை தொடங்கியுள்ளனர். மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ் நேரில் ஆய்வு செய்தார்.
முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு மதுரை செல்ல உள்ளார். நாளை காலை 10 மணிக்கு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வரே நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் வெளியானதும் மெரினா, அலங்காநல்லூர், கோவை வ.உ.சி மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல நகரங்களிலும் குழுமியுள்ள மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.