யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று மாலையில் வீசிய சுழல் காற்றால் 21 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட் டன. மழை காரணமாக குடாநாட்டில் பல இடங்களில் பகல் மற்றும் இரவு மின் தடைப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று மாலையில் திடீரென வீசிய சுழல் காற்றால் பொம்மைவெளி , புதிய சோனகத் தெருப் பகுதிகளில் 21 வீடுகளின் கூரைகள் முழுமையாகத் தூக்கி வீசப்பட்டன. மேலும் பல குடும்பங்களும் பாதிப்படைந்துள்ளனர்.
இதேவேளை ஓர் வீட்டின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டவேளையில் அதன் அருகில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தின்மீது வீழ்ந்தமையால் அதன் கண்ணாடி சேதமடைந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றுகாலையிலிருந்து பல இடங்களில் மின் தடைப்பட்டது. சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மின் கம்பிகள் அறுந்தன. வடமராட்சிக்கான மின் விநியோகம் இன்று காலைக்குள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபையினர் கூறினர்.
வட்டுக்கோட்டையில் மின் மாற்றியில் ஏற்பட்ட பெரு வெடிப்புக் காரணமாக மின் தடைப்பட்டது. அதனால் அந்தப் பிரதேசத்தில் மின் விநியோகம் தடைப்பட்டது. மின்சார சபை ஊழியர்கள் அவற்றைச் சீரமைப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மின்சார சபையினர் தெரிவித்தனர்.
நேற்று இரவு திடீரெனப் பல இடங்களிலும் மின் தடைப்பட்டதனால் பெரும் அசளகரியங்களை எதிர்கொண்டதாகப் பலரும் தெரிவித்தனர்.