திருகோணமலை, மூதூர், பெரியவெளிக் கிராமத்தில், மூன்று சிறுமியர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கின், அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று (05) இடம்பெற்றது.
மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.றிஸ்வான், முன்னிலையில், இந்த அடையாள அணிவகுப்பு, நேற்றுக் காலை 8:30 மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்றது.
இந்த அடையாள அணிவகுப்பில், 35 பேர் நிறுத்தப்பட்டனர். அவர்களை, ஒவ்வொரு சிறுமியரும் நான்கு தடவைகள் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு, கடந்த 31ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றவாளியைக் கண்டறிவதற்காக அடையாள அணிவகுப்பை, 5ஆம் திகதியன்று (நேற்று) நடத்துவதற்கு அன்றையதினம் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.
அதனையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் என்றுமில்லாதவாறு, பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்குள் சென்றவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆள் அடையாள அட்டையும் பரிசோதிக்கப்பட்டது. அத்துடன், அலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் எவையும், மன்றுக்குள் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், திருகோணமலை விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டிருந்த, இந்த வன்புணர்வுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் ஐவரையும் ஏற்றிக்கொண்டு, சிறைச்சாலைகள் பஸ், காலை 8:15 மணியளவில் வந்தது.
மூதூர் நீதவான் நீதிமன்றத்துக்கு, கைதிகள் அழைத்துவரப்படும் போது, சிறைச்சாலை வாசலில் வைத்தே, அவர்கள் இறக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்துச்செல்லப்படுவர்.
எனினும், சிறைச்சாலை பஸ்ஸானது நேற்றையதினம், வளாகத்துக்குள்ளேயே சென்றுவிட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு அண்மையில், பெருந்திரளானோர் குவிந்திருந்தனர். அங்கு அமைதியைக் காக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அரச தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சைவ சமய வகுப்புக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4.00 மணியளில் சென்றிருந்த, 7 மற்றும் எட்டு வயதுகளுடைய மூன்று மாணவியரே, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டனர்.
இம்மாணவிகளை, மல்லிகைத்தீவு பாடசாலை கட்டுமாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தவர்களில் சிலர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் என, அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் இருவரை அப்பிரதேச மக்கள் கட்டிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை அடுத்து பதற்றம் தணிந்தது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும், மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அடையாள அணிவகுப்பு, நேற்று (05) நடத்தப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஐவருடன், மேலும் 30 பேர் அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் சார்பில், பெண் சட்டத்தரணிகள் இருவர் அடங்கலாக ஐந்து சட்டத்தரணிகள், முன்னிலையாகியிருந்தனர்.
முகங்களை மூடியிருந்த அந்தச் சிறுமிகள் மூவரும், தலா நான்கு தடவைகள் என்ற வீதத்தில் 12 தடவைகள், 35 பேரையும் தனித்தனியாகப் பார்த்தனர். எனினும், அச்சிறுமியர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.
இதனையடுத்து, அந்த ஐவரும், முகங்களை மூடி அழைத்துவரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 12ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கையும் அன்றைய தினத்துக்கே ஒத்தவைத்தார்.
இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து பெற்ற மரபணு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் இவ்வழக்கு விசாரணை புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு மன்றில் கோரியிருந்தனர்.