அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றார். முன்னதாக துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். சம்பிரதாய நிகழ்வாக, நேற்றிரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள ஃப்ளேர் ஹவுஸில் ட்ரம்ப் தங்கினார். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கும் அனைவரும், இங்கு ஒருநாள் இரவு தங்குவது வழக்கம்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் ட்ரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர்.
இதன்பிறகு வெள்ளை மாளிகையில் ட்ரம்ப், அரவது மனைவி மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோருக்கு, அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் பராக் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் சம்பிரதாய முறையில் தேநீர் விருந்து அளித்தனர்.
இதன்பிறகு பதவியேற்பு விழா நடைபெறும் வாஷிங்டனின் கேப்பிட்டல் ஹில் பகுதிக்கு, ட்ரம்ப் மற்றும் ஒபாமா ஆகியோர் பாதுகாப்பு புடை சூழ காரில் பயணித்தனர். கேப்பிட்டல் ஹில் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.
முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும், அதிபர் தேர்தலில், ட்ரம்ப்பிடம் மோதி தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டனும் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்திய நேரப்படி இரவு 10.15 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. ஆரம்ப கட்ட நிகழ்ச்சிகளுக்கு பிறகு துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட், ட்ரம்ப்புக்கு அதிபராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது அரசு சார்பில் பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை கொடுக்கப்பட்டது. மக்கள் ஆரவாரம் செய்தனர். இதையடுத்து அவர் நன்றியுரையாற்றினார். நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபரான டொனால்டு டிரம்ப், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஹிலரி கிளிண்டனை மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.