நியுஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது. அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியது.
கடுமையான நில நடுக்கத்தை அடுத்து இரண்டு பேர் உயிரிழந்தனர். கூடுதல் விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று பிரதமர் ஜான் கே தெரிவித்துள்ளார்.
தலைநகர் வெலிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலோரப் பகுதியான கைகெளரா, உள்நாட்டுப் பகுதிய கல்வெர்டன் போன்ற பகுதிகளில் இருந்து உரிய தகவல் தொடர்புகள் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். கைகெளரா பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல் அலைகள் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றும், பல மணி நேரங்களுக்கு சுனாமி தாக்கம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிறைஸ்ட்சர்ச்சில் 2011 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 185 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நகரின் மையப்பகுதி அழிந்து போனது.
அதன் பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
பசிபிக் வலயத்தைச் சுற்றி நிகழும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புக்களின் நேரடி தாக்குதல் மையத்தில் நியுஸிலாந்து இருப்பதால் எப்போதும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.