Super User Written by  Nov 05, 2016 - 12825 Views

பரிஸ் பருவனிலை ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்றது

பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கையெழுத்தான உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது.

பலத்த புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட ஆபத்தான பருவநிலை மாற்றங்களை தவிர்ப்பதற்கு இந்த இலக்கு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தொழிற் புரட்சி மேற்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பை விட பூமியில் ஏற்கெனவே ஒரு டிகிரி வெப்பம் இப்போது அதிகரித்திருக்கிறது.

எரியாற்றல் உற்பத்தி, போக்குவரத்து, விவசாயம், குடியேற்றம் ஆகியவற்றிற்காக காடுகளை அழிப்பதால் மனிதர்கள் வெளியேற்றக்கூடிய பசுங்குடில் வாயுக்களால் முக்கியமாக பூமியின் வெப்பம் அதிகரிப்பதாக பருவநிலை அறிவியல் குற்றம் சாட்டுகிறது.

இந்த வாயுக்கள், குறிப்பாக கார்பன் டைஆக்ஸைடு வளி மண்டலத்தில் செறிவாகி, சூரியனிடம் இருந்த வருகின்ற வெப்பத்தை பூமியில் தங்கிவிட செய்கிறது.
இவ்வாறு உலகம் வெப்பமடைவதுதான் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அதனால், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிக்கோள் பூமியின் வெப்பத்தை 2 டிகிரி குறைப்பதாக நாம் கூறுகின்றபோது, இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் நாடுகள் தங்களுடைய கார்பன் வெளியேற்றத்தை கடுமையாக குறைக்க வேண்டியிருப்பதை குறிக்கிறது.
மாசு வெளியேற்றம் குறைவான எரிபொருள் ஆதாரங்களுக்கு மாறுவது செலவு குறைவானது, நீண்டகாலம் நிலைத்திருப்பது என்று நிபுணர்கள் நம்பினாலும், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பது பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.


இந்த ஒப்பந்தம் "அமலுக்கு வருவது" எதைக் குறிக்கிறது?
இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருவது என்பது, இது சர்வதேச சட்டமாவதை குறிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நாடுகள், தாங்கள் அளித்திருக்கும் உறுதிமொழியை நிறைவேற்ற கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு செயல்படத் தொடங்க வேண்டும்.
90-க்கு மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு தெரிவித்திருக்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாட்டில், ஐநாவின் 197 உறுப்பு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
ஆனால், இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாமல் இருப்பதால், ஒவ்வொரு நாடுகளின் தன்னார்வ அர்ப்பணத்தையும் செல்பாடுகளையும் சார்ந்துதான் இது அமைகிறது.

நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை, நிகழ்வுகள் அளவிடப்பட்டு மீளாய்வு செய்யப்படும் என்று 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்த ஐக்கிய நாடுகள் அவையின் பருவநிலை மாநாட்டின் தலைமை செயலகம் கூறியிருக்கிறது.
ஆனால், அது எவ்வளவு சரியாக செய்யப்படும் என்பதற்கு விடையில்லை.

அடுத்தவாரம் மொராக்கோவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் பற்றிய கூட்டத்தில் ஒரு விதிமுறை புத்தகத்தை எழுதுவது பற்றி கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

"2018 ஆம் ஆண்டுக்கு முன்னதாக, இன்னும் சில ஆண்டுகளில், அரசுகளும் கட்சிகளும் இந்த விவரங்கள் அடங்கிய சட்ட புத்தகத்தை முடித்திருக்கும்..." என்று ஐக்கிய நாடுகள் அவையின் செயல் அதிகாரி பேட்ரீசியா எஸ்பினோசாவும், வரவிருக்கும் பருவநிலை மாற்றம் பற்றி கூட்டத்தை நடத்துகின்ற மொராக்கோவின் வெளியுறவு அமைச்சருமான சாலஹெதீன் மிஸௌயரும் கூட்டாக வழங்கிய அறிக்கை தெரிவிக்கிறது.

"இந்த முயற்சியில் ஈடுபடுகின்ற ஒவ்வொருவரும் அவர்களுடைய திறனுக்கு ஏற்ப சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளை எல்லா தரப்பினரும் அதிகரிக்க தேவையான வெளிப்படை தன்மை உறுதிப்படுத்தப்படும்.

இதன் முக்கியத்துவம் என்ன?
மிக விரைவாக நடைமுறைக்கு வந்திருக்கும் முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களில் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தமும் அடங்குகிறது.

தொடக்கத்தில் இது, 2020 ஆம் ஆண்டு நடைமுறையாவதாக இருந்தது. அந்த நேரத்தில் கூட பல நாடுகள் இதனை ஏற்றுகொள்ளாது என்று பலரும் நம்பினர்.

இந்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வருவதற்கு உலகின் ஒட்டுமொத்த பசுங்குடில் வாயுக்களில் குறைந்தது 55 சதவீதத்தை வெளியேற்றுகின்ற 55 நாடுகள் இதனை ஏற்றுக்கொள்வது அவசியமாகியது.
எதிர்பாராத விதமாக அதிக மாசு வெளியேற்ற நாடுகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா நாடுகள் கடந்த சில மாதங்களில் இதனை ஏற்றுகொண்டதால், கட்டாயமாக தேவைப்படுகின்ற அளவை எட்டிய இந்த ஒப்பந்தம் செயல்பட தொடங்கியிருக்கிறது.

தொடக்கத்தில் பாரிஸ் ஒப்பந்தத்தை 2020 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனவே, 2015 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் வளிமண்டலத்தில் மாசு அளவு இன்னும் செறிவுறும் என்ற கவலைகள் எழுந்தன. இதனால் இயற்கையை சுத்தப்படுத்துவது மிகவும் கடினமாகும் என்று கருதப்பட்டது.

கடந்த வாரத்தில், வளி மண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவு 400 பிபிஎம் என்கிற அளவை கடந்து அதிக நிலையில் இருப்பதாகவும், பல தலைமுறைகளுக்கு இது குறைய போவதில்லை என்றும் உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்திருக்கிறது.

2016 ஆம் ஆண்டு முழுவதும் இந்த அதிக அளவை தாண்டியதாக இருக்கின்ற முதல் ஆண்டு என்றும் அது எச்சரித்திருக்கிறது.
பாதுகாப்பான வரையறைக்கு மேலாக கால் பகுதி அளவு உயர்வாக பசுங்குடில் வாயுக்களை உலகம் வெளியேற்றி வருவதை எச்சரித்து ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச்சூழல் திட்டம் பாரிஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு உலக அளவில் வெப்பம் அதிகரிப்பதை 2 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கு தேவையான கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்திற்கு அதிகமாக 12 முதல் 14கிகா டன்கள் வெளியேற்றப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டு கார்பன் வெளியேற்றம் 56 கிகா டன்களை எட்டுகின்றபோது, 2.9 முதல் 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் இந்த நூற்றாண்டிலேயே அதிகரிக்க காரணமாக அமையும் என்று ஐக்கிய நாடுகள் அவை சுற்றுச்சூழல் திட்டத்தின் மாசு வெளியேற்ற இடைவெளி அறிக்கை எச்சரித்திருக்கிறது.

ஒரு கிகா டன் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான துறை வெளியேற்றும் மாசு உள்பட போக்குவரத்து துறை வெளியேற்றுகின்ற மாசு அளவாகும்.

ஏழை நாடுகளுக்கு என்ன கிடைக்கும்?
கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது என்பது பெரும்பாலும் முக்கிய பொருளாதார நாடுகளை உள்ளடக்குகிறது.
இதனால், பாரிஸ் ஒப்பந்தம் ஏழை நாடுகளோடு செய்வதற்கு ஒன்றுமில்லை ஒன்று பொருள்படுகிறதா?
பணக்கார மற்றும் ஏழை நாடுகளும் அனைத்தும், அவை ஒவ்வொன்றும் வெளியேற்றுகின்ற கார்பன் அளவை குறைப்பதற்கு இயன்ற வகையில் செயல்பட வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்பாராத பாதிப்புக்களை சமாளிக்க ஏழை நாடுகள் மற்றும் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளுக்கு உதவுவதற்கும்தான் இந்த பாரிஸ் ஒப்பந்தம்.

பருவநிலை மாற்றத்திற்கான நிதி ஆதரவைதான் இது குறிக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்களை வளர்முக நாடுகளுக்கு வழங்குவதையும் பாரிஸ் ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
மாசு வெளியேற்றாத எரிபொருள்களுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் மாறுவதற்காகவும், மாறிவரும் பருவநிலைக்கும் ஏற்ப மாற்றங்களை உருவாக்க உதவுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
பருவநிலை மாறுதலுக்கு உதவ அளிக்கப்படும் நிதியானது வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கும், சிறிய தீவு நாடுகளின் நலன்களுக்கும் வழங்கப்படும்.

காடு அழித்தல்

விரைவாக வளர்ச்சி அடைகின்ற நாடுகளில் மாசு வெளியேற்றாத எரிபொருள் மாற்றத்திற்கு நிதி ஆதரவு அளிப்பது, நன்கொடை அளிக்கின்ற நாடுகளின் முதன்மை தெரிவாக இருப்பதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பணக்கார நாடுகள் ஓராண்டுக்கு 100 பில்லியன் டாலர் வழங்குவது 2020 ஆம் ஆண்டுக்குள் எட்டக்கூடிய இலக்கு என்று சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள வரைவு தெரிவிக்கிறது.

ஆனால் இந்த வரைவு தங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை என்கிறார் ஐக்கிய நாடுகள் பேச்சுவார்த்தைகளில் வளர்ச்சி குறைந்த நாடுகள் அமைப்பின் தலைவர் தோசி மப்பனு-மப்பனு.

"ஓராண்டு எட்டக்கூடிய இலக்குகளின் தகவல்களை விவரிப்பதாகவும், மாற்றங்களை தழுவிக் கொள்வதற்கும், கருவிகளுக்கும் அவற்றை பயன்படுத்துகிற பாதைக்கும் இடையே சமநிலையை எட்டுவதற்கான பார்வையில் மாசு வெளியேற்றத்தை தணிப்பதற்கான ஒதுக்கீடுகளாலும் வளர்ச்சி குறைந்த நாடுகளின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி இந்த வரைவு இருக்கிறது".

மிகவும் ஏழையான நாடுகளுக்கு பருவநிலை மாற்றங்களை சமாளிப்பதற்கு போராடுவதற்காக ஐந்தில் ஒரு பங்கு நிதி வழங்கப்பட வேண்டும் என்று ஏழை நாடுகளில் பருவநிலை மாற்றம் பற்றிய களப்பணிகளை மேற்கொண்டு வரும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் தெரிவித்திருக்கிறது.

பருவநிலை மாற்றத்திற்கு நிதி ஆதரவு வழங்குவதற்காக பணக்கார நாடுகள் வழங்குவதாக ஒப்பு கொண்டுள்ள 41 பில்லியன் டாலர் நிதி ஆதரவில் 8.7 பில்லியன் டாலர் மட்டுமே வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு சென்றடைந்ததாக 2016 ஆம் ஆண்டு பருவநிலை மாற்ற நிதி ஆதரவு நிழல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  நன்றி பிபிசி
Login to post comments

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…