அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க உள்ள அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அனைத்து 50 மாநிலங்களும், நிர்வாகத் தலைநகரான வாஷிங்டன் டிசி பகுதியும், ஆறு வெவ்வேறு நேர மண்டலங்களில் தங்கள் வாக்குப்பதிவை செலுத்தவுள்ளன.
நாட்டின் மேற்கு கடற்கரை பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைவதற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பாக, கடும் போட்டி நிலவும் முக்கிய மாநிலங்களான வர்ஜினியா மற்றும் ஜார்ஜியா ஆகியவற்றில் நள்ளிரவில் (ஜிஎம்டி நேரப்படி) முதல் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடும் போட்டி நிலவும் சில முக்கியமான மாநிலங்களின் ஊடாக ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு முக்கிய அதிபர் வேட்பாளர்களும் கடும் பிரசாரம் செய்துள்ள சூழலில், திங்கள்கிழமை தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.