மெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.