சென்னையில் வியாழக்கிழமையன்று தண்ணீர் லாரி மோதி மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, விபத்துகள் நடக்கும்போது ஓட்டுனரின் உரிமத்தை ரத்துசெய்யும் நடைமுறை சரியாகப் பின்பற்றப்படாத காரணத்தால்தான் இம்மாதிரி விபத்துகள் தொடர்ந்து நடப்பதாக ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை, போக்குவரத்துத் துறையின் அலட்சியமே இதற்குக் காரணம் என செய்திகளிலிருந்து அறிய வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆகவே இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் தலைமைச் செயலர், காவல்துறைத் தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை அளிக்க வேண்டுமென கோருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் லாரிகளுக்கான விதிகள், ஒரு நாளைக்கு எத்தனை முறை அவை தண்ணீர் ஏற்றிச் செல்லலாம், தண்ணீர் லாரி தொடர்பான விபத்துகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்தவர்கள் குறித்த விவரம், சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த விவரங்களையும் ஆணையம் கோரியுள்ளது.
மாநில போக்குவரத்துத் துறை, காவல்துறை, பிற நிர்வாக அதிகாரிகள் விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாத காரணத்தினாலேயே சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.