இலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா
இலங்கையில் சிவசேனை அமைப்பு தொடங்கி இருப்பதை, முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்கு பிறகு அங்கு வாழ்கின்ற மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், இந்தியாவில் உள்ள பி.ஜே.பியினரின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முயற்சியாக தான் பார்ப்பதாகவும், ஆனால் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.
''விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் அடையாளத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினாரே தவிர இந்து மதத்தை முன்வைத்து அல்ல '' என்று அவர் கூறினார்.
1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள்
தமிழகத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேசிய அளவில் தலித் முன்னணியின் மாநாடு ஒன்றை நடத்தவிருப்பதாக கூறிய அவர், அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண மையத்தின் புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி, இந்தியாவிலே தமிழகத்தில் அதிகளிவில் கெளரவ கொலைகள் நடத்திருப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் 1700க்கும் மேற்பட்ட வன்கொடுமை தாக்குதல்கள் தலித்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஜெ., உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முடியாத நிலை
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசிய அவர், தமிழக முதல்வர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர் உடம்பிற்கு என்ன என்பதையே யாரும் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மத்திய அமைச்சர்கள், ஆளுநர் யாருமே முதல்வரை சந்திக்க முடியவில்லை என்கிற போது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல வேண்டாம். அவரது உடல் நிலை குறித்த நல்ல தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார்.
முன்னர் இருந்த சுறுசுறுப்பு தற்போது இல்லை
மேலும், ஆட்சி அதிகாரம் குறித்து பல தரப்பட்ட தகவல் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆளுநர் ஒ.பன்னீர் செல்வத்திடம் பொறுப்புகளை வழங்கி இருப்பதாகவும், முதல்வர் ஜெயலலிதா முன்னர் சுறுசுறுப்பாக ஆட்சி செய்தது போன்ற நிலை தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தோழமை தழைத்தோங்குகிறது
இறுதியாக, உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சியும் தோழமையுடன் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.