மும்பை: குரோமோசோம்களின் குளறுபடியால் பாலியல் மாற்றத்திற்கு உள்ளாகும் ஆண்-பெண்கள் பிறப்புறுப்பை மாற்றிக்கொள்ள விடிவுகாலம் பிறந்துள்ளது. பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதை உலகின் பல நாடுகள் அங்கீகரித்துள்ள போதிலும், இது ஒரு ஆபத்தான அறுவை சிகிச்சையாகவே கருதுகிறது மருத்துவ உலகம்.
இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த 21 வயது இளம் பெண், தன்னை ஆணாக கருதி வாழ்ந்து வந்தார். இதனால் மூன்றாம் பாலினத்தவராக அவரை கருதிய குடும்பத்தாரும், சமூகமும் ஒதுக்கி தள்ளியது. கோபமடைந்த அந்த பெண், தன்னை முழுமையான ஆணாக மாற்றிக்கொள்ள விரும்பினார். அவரின் இந்த ஆசைக்கு ஒப்புக்கொண்ட அவரின் தாயும், மருத்துவ சிகிச்சைக்கு பச்சைக்கொடி காட்டினார். முதல்கட்டமாக, கடந்த ஜனவரியில் அந்த பெண்ணின் மார்பகங்கள் இரண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டன.
பின்னர், மற்றொரு ஆபரேஷன் மூலம் கருப்பாதையும், கர்ப்பபையும் நீக்கப்பட்டன. அடுத்தகட்டமாக, ஆண்மை ஹார்மோனை தூண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நிறைவாக ஆணுறுப்பை அமைப்பதற்கான ஆபத்தான, அதிநவீன அறுவை சிகிச்சையும் அப்பெண்ணிடம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
அவரது முழங்கையின் ஒருபகுதியில் இருந்து சதை வெட்டி எடுக்கப்பட்டு, ஆணுறுப்புடன்,சிறுநீர் பாதையும் வடிவமைக்கப்பட்டு, அடிவயிற்றில் பொருத்தப்பட்டது. பின்னர், அதே முழங்கை பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த அணுக்கள் அந்த உறுப்புக்குள் செலுத்தப்பட்டது.
இதன்மூலம் இந்த பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முழுஅளவில் வெற்றி பெற்றுள்ளது. மிகவும் சிக்கலான இந்த சிகிச்சை மும்பையில் உள்ள 'ஃபோர்டிஸ் எஸ்.எல். ரஹேஜா' மருத்துவமனையின், மாற்றுறுப்பு மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டாக்டர் பராக் டெலாங் இந்த குழுவின் தலைமை வகித்தார். சிகிச்சையின் இறுதிகட்டமாக ஆணுறுப்பின் எழுச்சிக்கு தேவையான 'செயற்கை பம்ப்' ஒன்று இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவரது உடலில் பொருத்தப்படவுள்ளது. அதன்பிறகு பெண்களை பார்த்து இயல்பான எழுச்சியை ஆணுறுப்பு பெற வாய்ப்புள்ளது.