கடந்த 30 வருடகாலத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர்நீத்த போராளிகள் மற்றும் எங்களுடைய உறவுகளுக்கு இந்தக் கார்த்திகை மாதத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இந்த நாடாளுமன்றம் அனுமதியளிக்கவேண்டும் - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செவவுத்திட்டம் மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறித்த கோரிக்கையை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் உயிர்நீத்த எம் உறவுகள் மற்றும் போராளிகளுக்கு இந்த கார்த்திகை மாதத்தில், இச்சபையில் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கின்றேன். எனினும், உயிர்நீத்த எம் உறவுகள் மற்றும் போராளிகளை, நினைவு கூர்வதற்கு கடந்த அரசினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், உயிர்நீத்தோரை இந்த கார்த்திகை மாதத்தில் நினைவுகூர்வதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டும். அதுமட்டுமன்றி உயிர் நீத்தவர்களுக்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நட்டஈடுவழங்குவதற்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.