கடத்தப்பட்ட மாணவர்கள் அப்பாவிகள்: சிப்பாய் சாட்சி

தெற்கில் கோத்தபாய ராஜபக்ஷ கும்பலால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட காணாமல் போகச்செய்யப்பட்ட 5 மாண வர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என கடற்படைப் புலனாய்வு பிரி வின் சிப்பாய் அளுத் கெதர உப்புல் பண்டார நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள 5 மாணவர்களில் மூவர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னி லையில் இடம்பெற்றது.

குறித்த 5 மாணவர்களும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு தாமே உணவு வழங்கியதாகவும், அவர்களுடன் உரையாடியிருப்பதாகவும் மன்றில் சாட்சியமளிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களுடனான உரையாடலின்போது விடுதலைப் புலிகளுடன் எவ்வித தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதை தாம் புரிந்துகொண்டதாகவும் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவின் சிப்பாய் மன்றில் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட மறுதினமே கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு வான் ஒன்றில் குறித்த 5 மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களுடன் மென்டிஸ் எனும் கடற்படை சிப்பாயும், அம்பாறை காமினி எனும் நபரும் சென்றிருந்ததாகவும் சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட ஐவரில் கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், மற்றும் திகலேஸ்வரன் ராமலிங்கம் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாக இந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நேற்றைய சாட்சியங்கள் முடிந்த பின்னர் அரச சட்டவாதிக்கு சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

எனினும் குறுக்கு விசாரணை செய்வதற்கு அரச சட்டவாதி கால அவகாசம் கோரியிருந்தார்.
இதனைக் கவனத்திற்கு எடுத்த நீதிமன்றம், இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

நடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை

யுத்தம் மற்றும் விபத்துக்களால் காயமடைந்து சுயமாக நடமாட முடியாது படுக்கையிலிருக்கும் நோயளிகளை அவர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்கும் செயற்றிட்டம் ஒன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசேட செயற்றிட்டம் நேற்று முன்தினம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான செயற்திட்டத்தை எமது மாகாணத்தில் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றோம். நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முற்றிலும் வேறுபட்டதாகவே உள்ளது. இதனடிப்படையில் எமது மாகாணத்தின் தேவை கருதி இவ்வாறான பிரத்தியேக திட்டங்களை ஆரம்பிக்வேண்டிய தேவை எழுந்துள்ளது.

எமது மாகாணத்தில் இந்த கொடிய யுத்தத்தின் காரணமாக பல நூற்றுக்கணக்கானோர் காயப்பட்டு சுயமாக இயங்கமுடியாமல் வீடுகளில் உள்ளனர். இவர்களை கவனிக்க தற்போதுள்ள சுகாதார சேவையில் வசதிகள் இல்லை. எனவேதான் இவ்வாறானவர்களை கவனிக்க 2014ம் ஆண்டு வவுனியாவில் வைகறை எனும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்தோம்.

எனினும் அந்த புனர்வாழ்வு நிலையத்தில் போதிய இடவசதிகள் இல்லாத நிலையில் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறாக சுயமாக இயங்கமுடியாது படுக்கையில் இருக்கும் நோயளிகள் பலவேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களில் பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதற்கு வசதியற்றவர்களாக இருக்கின்றார்கள். எனவே அவர்களின் நலன் கருதியே இந்த செய்ற்றிட்டத்தை ஆரம்பிக்கின்றோம்.

குறித்த திட்டம் மாகாண நிதியிலோ அல்லது மத்திய அரசின் நிதியிலோ ஆரம்பிக்கவில்லை. அண்மையில் நான் கனடாவுக்கு விஜயம் செய்தபோது புலம்பெயர் உறவுகளை சந்தித்தபோது நாங்கள் எதிர்நோக்கம் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். புலம்பெயர் கொடையாளர்களின் உதவியுடன் உள்ளுரில் உள்ள தொண்டு நிறுவனங்களினூடாகவே இந்த செய்ற்திட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

எதிர்காலத்தில் இந்தச் செயற்றிட்டம் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு நடமாடும் குழு சேவையில் ஈடுபடும். அதில் மருத்துவ தாதி, உளநல ஆலோசகர் மற்றும் உதவியாளர் ஒருவர் என இடம்பெறுவர். இவர்கள் நோயளிகளின் வீடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு சிகிச்சைகளை வழங்குவர் என்று தெரிவித்தார்.

அரசுகள் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுன்வரவில்லை

தமிழர் பிரச்சினையை இந்த நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஆட்சியைக் கைப்பற்றவே கயில் எடுத்தனரே தவிர தீர்வொன்றைப் பெறுவதற்காக பயன்படுத்தவில்லை என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் நாட்டை ஆட்சிசெய்த தலைவர்கள் இனப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வொன்றை வழங்காததினால் தான் 30 வருடகால யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி – விகாரமஹாதேவி கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று அந்த கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடை பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இனங்களுக்கு இடையே சுதந்திரமான வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் புதிய அரசியலமைப்பு ஒன்றை அரசாங்கம் உருவாக்கும் எனவும் கூறினார்.

“நம்மில் தவறு எங்கு இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து அவற்றை சரிசெய்து முன்நோக்கப் பயணிப்பதற்கான தருணம் வந்து ள்ளது. இனங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை சரிவர முகாமைசெய்யாமையே நாங்கள் இழைத்த பெருந்தவறாகும். மலே சியாவில் அந்நாட்டுப் பிரஜைகள் 49 வீதமானவர்களே உள்ளனர். 51 வீதமானவர்கள் சீன நாட்டவர்கள். ஆனாலும் அந்த நாட்டில் பாரியதொரு சிவில் யுத்தம் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டு, அனைத்து இனங்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கிக்கொடுக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பொன்றும் உருவாக்க ப்பட்டது.

சிங்கப்பூரும் அப்படித்தான். சுதந்திரம் கிடைத்து ஓரிரு வருடங்கள் கழிந்தபோது இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டது.துரதிஷ்டவசமாக நமது நாட்டில் அது தீர்க்கப்படவில்லை. இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை பயன்ப டுத்தி ஆட்சியைக் கைப்பற்ற அனைத்து கட்சிகளும் முயன்ற காரணத்தினால்தான் 30 வருடகால யுத்தத்திற்கு முகங்கொடு க்கவேண்டியதாயிற்று. சுதந்திரம் கிடைத்தபோது அப்போதிருந்த தலைவர்கள் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தி ருந்தால் இந்த நாடு இவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. 1948ஆம் ஆண்டில் ஒருசதமேனும் கடனாளியாக இல்லா திருந்த எமது நாடு மொத்த தேசிய வருமானத்தைக் கொண்டாகிலும் கடனை செலுத்த முடியாதளவிற்கு எமது பொருளாதாரம் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. வருமானத்தை கடனுக்குச் செலுத்தினால் ஒருசதமேனும் எஞ்சியிருக்காது. எமக்கு என்ன நடந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.

எமக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பதாக கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறினார்கள். எனவே நாடாளுமன்றில் 1952ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்ததைப் போன்று அனைத்து இனங்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவோம். கட்சிகளுக்கு இடையிலுள்ள இனவாதம் தகர்த்தெறியப்பட்டு ஒன்று சேர்ந்துள்ளன. நமது நாடு சுதந்திரம் அடைந்து 67 வருடங்கள் ஆகின்ற போதிலும் இலங்கை பிரஜை என்ற அடையாளத்தை உறுதிசெய்ய முடியாதுபோயுள்ளது. இந்தியாவில் 25 மாநிலங்கள் உள்ளன. ஒரு மாநிலத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநில ங்களிலும் வெவ்வேறு மொழிகள் உள்ளன. ஆனாலும் நாட்டை ஒன்றிணைத்து ஒரு நபர் வெளியில் சென்று பெருமையாகக் கூறும் வண்ணம் அந்த நாட்டில் சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது” - என்றார்.

பிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை

பிரான்ஸில் புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்று ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க தமிழ் இளைஞர் ஒரு வரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த கொலைக்கான முழுமையான விபரங்கள் இதுவரையில் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மோதல்கள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் கொலை இடம்பெற்ற வீட்டில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…