தேச விரோத சக்திகள் போராட்ட களத்தில் புகுந்துவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, மாணவர்கள் சென்னை மெரினாவில் நடத்திய அறவழி போராட்டம் நேற்றுடன் முடிவிக்கு வந்தது. முன்னதாக போலீஸ் திடீரென நடத்திய தடியடியால் தமிழகமே போர்க்களமானது.
இப்படி தடியடி நடத்த காரணமே, மாணவர்கள் போராட்டத்திற்கு உள்ளே தேச விரோத சக்திகள் புகுந்து அவர்களை திசை மாற்ற முற்பட்டதுதான் என்று காவல்துறையும், அரசும் தெரிவித்துள்ளது (சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றில், அரசு வக்கீலும் இதையே குறிப்பிட்டார்). இந்நிலையில், இன்று சென்னையில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் இக்கேள்வியை முன்வைத்தனர். கமல்ஹாசன் கூறியதாவது: தமிழகம், மைசூர் உட்பட பல மாகாணங்கள் இந்தியாவுடன் இருக்க முடியாது என கூறி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டவைதான்.
மேனன் மற்றும் பட்டேல்தான் அலைந்து திரிந்து ஒவ்வொரு மன்னர்களாக போய் பார்த்து, பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா என்ற ஒரு நாட்டை ஒருங்கிணைத்தனர். இதன்பிறகு இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டபோது, பிரிவினை பேசியவர்கள் எல்லோருமே குடியரசு தின விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். எனவே பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.
'தெற்கு தேய்கிறது' என கோஷம் எழுந்தால் அதை மதித்து ஏன் அப்படி கோஷம் எழுகிறது என்பதை பார்த்து நிவர்த்தி செய்யுங்கள்.நம்மை புறக்கணிக்கிறார்கள் என்ற எண்ணம் சில மக்களிடம் ஏற்பட பல வரலாற்று காரணங்கள் உள்ளன. அதை நீங்களே ஆராய்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்தை, ராவண பூமி என்று விமர்சனம் செய்து, தமிழகத்தை புறக்கணித்தவர்களும் இருந்தனர். என்னை பார்த்து கூட நீங்கள் ராவண பூமியிலிருந்து வருகிறீர்களா என கேட்டவர்கள் உண்டு. "நானே ராவணன்தான்" என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன். ஒவ்வொரு வெறுப்புக்கு பிறகும் ஒரு வரலாற்று காரணம் உண்டு.
அமெரிக்காவில் கூட பிரிவினைவாதம் பேசுவோர் உண்டு. அதையெல்லாம் சரி செய்ய வேண்டியதுதான் ஆட்சியாளர்கள் கடமை. ஜல்லிக்கட்டு பிரச்சினையை அரசு இன்னும் திறம்பட தீர்த்து வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பின் அடையாளம்தான் ஜல்லிக்கட்டு போராட்டமாக வெடித்துவிட்டது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஜல்லிக்கட்டு போராட்டம் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாறு கமல் தெரிவித்தார்.