பாகிஸ்தானில் வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லஸ்பெல்லா மாவட்டத்தில் தர்கா ஷா நூரணி என்ற பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு தினமும் மாலை நேரத்தில் ‘தாமல்’ என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல நடன நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்ப்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் வந்து இருந்தனர். அப்போது திடீரென பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 30 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கராச்சி மற்றும் அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ஆம்புலன்ஸ்களில் காயம் அடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட போதும், வைத்தியசாலையில்; சிகிச்சை பலனின்றியும் சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது.
மாகாண உள்துறை மந்திரி சர்ப்ராஸ் புக்தி பேசுகையில், “குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாகினர், 105 பேர் காயம் அடைந்து உள்ளனர்,” என்றார்.
குண்டு வெடிப்பு நடந்த இடம் மலைப்பகுதியானது. இங்கிருந்து மூன்று மணிநேர பயணத்தை அடுத்தே கராச்சியை அடைய முடியும். மிகவும் பின் தங்கிய பகுதியான அங்கு எந்தஒரு மருத்துவ வசியும், அடிப்படை வசதியும் கிடையாது. இதுவும் உயிரிழப்பு அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்புக்கு எந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. உயிரிழந்தவர்களில் அதிமானோர் சிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.