குமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி

இந்திய முன்னாள் இராணுவ வீரரும், இந்திய அமைதிகாக்கும் படை அதிகாரியாக இலங்கையில் பணியாற்றியவரும் இன்னாள் ஊடகவியலாளருமான சுஷாந்த் சிங், ‘மிஷன் ஓவர்சீஸ்: டெயாரிங் ஒப்பரேஷன்ஸ் பை த இந்தியன் மிலிட்டரி’ என்ற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கு வெளியே - பிற நாடுகளில் - இந்திய இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்த மிக முக்கிய சம்பவங்களின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.

இந்நூலில், 1988ஆம் ஆண்டு மாலைதீவில் இந்திய இராணுவம் சார்பாக நடத்தப்பட்ட ‘காக்டஸ்’ இராணுவ நடவடிக்கை, 2000ஆம் ஆண்டு சியரா லியோனில் நடத்திய ‘குர்கி’ இராணுவ நடவடிக்கை என்பவற்றுடன், 1987ஆம் ஆண்டு இலங்கையில் ‘பவன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை குறித்தும் பல புதிய தகவல்களை சுஷாந்த் சிங் இந்நூலில் வெளியிட்டுள்ளார்.

அதில், விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட பதின்மூன்று வீரர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

“1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி காலை பத்து மணியளவில் மேஜர் ஷெனன் சிங்கின் படையணிக்கு இலங்கை இராணுவத்தின் 54வது படையணியில் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது. அதில், இந்திய அமைதிகாக்கும் படையினர் வசமிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் பதின்மூவரையும் நீதிமன்ற விசாரணைக்காக அன்று மாலை நான்கு மணிக்கு தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், பதின்மூவரும் சிறைவைக்கப்பட்டிருந்த பலாலி உணவகத்தின் பாதுகாப்பை முழுமையாக இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் நீங்கிச் செல்ல வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இது மேஜர் ஷெனன் சிங்குக்கு கடும் அதிருப்தியைத் தந்திருந்தது. ஏனெனில், ஏற்கனவே பிடித்துவைக்கப்பட்ட பதின்மூன்று போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அவர்களை விசாரிப்பது முறையல்ல என்று அவர் கருதினார். மேலும், அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் அழுத்தங்களுக்கு இந்திய இராணுவம் செவிசாய்க்காது என்றும் புலிகள் நம்பியிருந்தனர்.

“தமக்குக் கிடைத்த தகவலை டெல்லி வட்டாரத்துக்குத் தெரியப்படுத்திய ஷெனன் சிங், போராளிகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், அப்படி ஒப்படைத்தால், இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான நல்லெண்ண உறவு கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் விளக்கியிருந்தார். எனினும் டெல்லியில் இருந்து அவருக்கு சாதகமான பதில் கிடைக்காததால், போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைக்க ஷெனான் சிங் வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டார்.

“இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த போராளி குமரப்பா, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாம் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டால் அதுவே எமது கடைசி நாளாக அமைந்துவிடும் என்று எமது தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்” என்று ஷெனான் சிங்கிடம் கூறினார். இந்த வார்த்தைகளின் மறைபொருளைப் புரிந்துகொள்ளாத ஷெனான், விருப்பமேயில்லாமல் மேலிடத்து உத்தரவுக்கு அடிபணியத் தயாரானார்.

“மற்றொருபுறம், இந்தச் செய்தியைக் கேட்ட போராளிகள், தமக்கு காகிதமும் பேனையும் தருமாறு கேட்டதுடன், ஒரு கடிதத்தை எழுதி உறவினர்களுக்குக் கொடுத்தனுப்பினர். மதிய நேரம் போராளிகள் பதின்மூவருக்கும் மதிய உணவு டிபன் கெரியரில் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்திய இராணுவத்தின் தீவிர பரிசோதனையின் பின் அந்த கெரியர்கள் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்டன.

“மிகச் சரியாக மாலை நான்கு மணிக்கு மேஜர் ஷெனான் சிங் 54வது படையணித் தலைமையதிகாரியிடம் பாதுகாப்பை ஒப்படைத்துவிட்டு தமது படையணியின் பாதுகாப்பை விலக்கிக் கொண்டு, சுமார் 500 மீற்றர் தொலைவே உள்ள தமது முகாமைச் சென்றடைந்தார். போராளிகளை இலங்கை இராணுவம் வசம் ஒப்படைத்துவிட்டது பற்றி டெல்லி இராணுவ அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.

“சில நிமிடங்களில், இலங்கை இராணுவ வீரர் ஒருவர் மேஜர் ஷெனானிடம் ஓடி வந்து, போராளிகளை மீண்டும் அவரே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். ஆனால், மேலிடத்து உத்தரவு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று ஷெனான் மறுத்துவிட்டார். பின்னர், இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ஷெனானிடம், போராளிகளைக் கையேற்குமாறு கூறினார்.

“அதற்கு ஷெனான், “இலங்கை இராணுவத்தினர் போராளிகளைக் கையளிக்க மறுத்தால் அவர்களைச் சுடலாமா? என்னிடம் கையளித்தபின் போராளிகளை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றால் நான் என்ன செய்வது? அல்லது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதலில் இறங்கினால் நான் என்ன செய்வது?” என்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி டெல்லி இராணுவ தலைமையகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார் அந்த உயரதிகாரி.

“அதேநேரம், வயர்லஸ் கருவி மூலம் ஷெனானைத் தொடர்புகொண்ட இலங்கை இராணுவ அதிகாரியொருவர், குமரப்பா மற்றும் புலேந்திரன் உட்பட பதின்மூன்று போராளிகளும் சயனைட் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவமே விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் மீது காழ்ப்புணர்ச்சியாக உருவெடுத்து, கடைசியில் ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கும் காரணமாக அமைந்தது.”

இவ்வாறு அந்த நூலில் சுஷாந்த் சிங் தெரிவித்துள்ளார்.

தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.

தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்

ச‌ல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் மோசடி செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரள தெருநாய் தொடர்பாக வழக்கு தொடருவதாக அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரிய வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா திங்கள்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதனிடையே ச‌ல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக பீட்டாவின் கூட்டாளி கியூப்பா, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தன.

தற்போது ச‌ல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞருக்கு அதன் செயலர் ரவிக்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், எந்த ஒரு வழக்கு தொடரும் முன்னரும் உரிய அனுமதி வாங்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதனிடையே தமிழக சட்டசபையில் கடந்த 23-ந் தேதியன்று ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்ட அதே நாளில் விலங்குகள் நல வாரியத்தின் வழக்கறிஞர், கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் எனக் கூறி அதன் செயலர் ரவிக்குமாரிடம் அனுமதி வாங்கினாராம்.

அந்த அனுமதியை வைத்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தாராம். இந்த உண்மை தெரியவந்ததால் நேற்று வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பினார் விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

மகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்

மகன் அடையவிருக்கும் வெற்றிக்கான பயணச் செலவாக, வெறும் பத்து ரூபாயை மட்டும் தர முடிந்த சரோஜா தனித்து வாழும் ஒரு சாதனைப் பெண். அவர்தான் கனவுக்காக வாழ்க்கையில் போராடிய ஏழைத்தாய் சரோஜா.

''திருமண வாழ்க்கையில் சந்தித்த தோல்வி என்னைத் தனித்து வாழும் பெண்ணாக மாற்றியது. ஒலிம்பிக்ஸ் போட்டி பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் மகன் உலக அளவில் பாராட்டு பெற வேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்ததில்லை. எனது மகன் பாரலிம்பிக்ஸ் போட்டிக்காகச் சென்றது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது.தொலைக்காட்சியில் மாரியப்பன் தங்கம் வென்றதைப் பார்த்த பலருக்கு அதை நம்ப முடியவில்லை,''' என்றார்.

ஆரம்பத்தில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தை இருந்ததால் வாடகை வீடு கிடைப்பதில் கூடச் சிரமப்பட்டதாக அவர் கூறுகின்றார். ''உறவினர்கள் பலரும் ஒதுக்கி வைத்தனர். செங்கல் சுமக்கும் வேலை, விவசாய கூலி வேலையில் கிடைத்த காசு, எனக்கும் எனது மூன்று மகன்களுக்கும் ஒரு வேளை உணவை உறுதி செய்தது. அவர்கள் என்னிடம் எதையும் வாங்கித் தர கேட்டதில்லை,'' என்றார் சரோஜா.

மாரியப்பனின் ஐந்து வயதில் ஒரு விபத்தில் அவரது வலது கால் பாதத்தின் பெரும்பகுதி சிதைந்தது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட தனது மகனுக்கு உற்சாகம் மட்டுமே அளிக்கமுடிந்தது என்றார் சரோஜா. ''மாரியப்பன் மற்றும் அவனது தம்பிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை நான் அனுமதித்தேன். அவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் மட்டும் தான் என்னால் தர கூடிய ஒன்றாக இருந்தது. வளரும் போது, அவன் பரிசு வாங்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல கூட எனக்கு நேரம் இருந்ததில்லை,'' என்கிறார்.

கடந்த சில மாதங்களில் தனது உடல் பலம் முழுவதையும் இழந்து, மன வலிமையையும் இழந்த சரோஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். ''தற்கொலை தான் தீர்வு என நினைத்தேன். எனது மகன் மாநில அளவு மற்றும் தேசிய அளவில் பரிசுகளை குவித்திருந்தாலும், எங்கள் குடும்பத்திற்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த ஒலிம்பிக் பரிசு எங்களுக்கு புதிய பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டது,'' என்றார் சரோஜா.

தமிழக அரசு கொடுத்த இரண்டு கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கியுள்ள 75 லட்சம், பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த நிதி எனப் பல பரிசுகள் சரோஜாவின் இல்லத்தில் குவிந்துள்ளன. ஆனால் சரோஜாவுக்கு, அடுத்தமுறை தனது மகன் விளையாட்டு போட்டிக்கு செல்லும் போது, கை நிறைய பணம் தர முடியும் என்பது பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

நள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்

தென் இந்தியா ராமெஸ்வரம் கடற்பகுதியில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 11 பேரை சிறை பிடித்துச் சென்றுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒரு வாரத்துக்குப் பிறகு நேற்று கடலுக்குச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என கரைக்கு திரும்பியுள்ளனர்.அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனு Breaking News : அதிமுக எம்.பி.க்கள் பிரதமரிடம் மனுPolitics Powered by அப்போது படகுகளில் நுழைந்த சிங்கள கடற்படையினர் அதிலிருந்த மீனவர்களை தாக்கியோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்த அவர்கள், கரமலையான், வீரணன், ராஜகோபால், ஜோதி உள்ளிட்ட 11 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.

காங்கேசம் துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே இலங்கை கடற்படையின் தாக்குதலால் கொந்தளித்துள்ள சக மீனவர்கள் , வாழ்வாதாரத்தை காக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை

வேலூர்: நளினியின் சுயசரிதை அதற்குள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தனது சுயசரிதையில் நளினி என்ன சொல்லியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நளினியின் சுயசரிதை நிச்சயம் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. காரணம், அவரது கடந்த 25 ஆண்டு கால சிறை வாழ்க்கை. இத்தனை காலமாக சிறைக்குள்ளேயே அடைபட்டு தனது விடியலுக்குத் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வரும் நளினி நிச்சயம் தனது மனக் குமுறல்களை இந்த நூலில் கொட்டியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னல்கள் இந்த நூலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின்போது தான் சந்தித்த பல்வேறு இன்னல்கள், கர்ப்பிணியாக சிறையில் பட்ட அவஸ்தைகளை அவர் விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்காவின் சந்திப்பு மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்துத்தான் மிக முக்கிய எதிர்பார்ப்பு உள்ளது.

நூலின் பெயரிலும் கூட பிரியங்கா காந்தி பெயர் வருவதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நளினியை மிரட்டினாரா பிரியங்கா பிரியங்காவுடனான சந்திப்பு குறித்து அவர் விவரித்திருக்கலாம் என்று தெரிகிறது. வேலூர் சிறைக்கு வந்து நளினியைச் சந்தித்தபோது பிரியங்கா, நளினியை மிரட்டிச் சென்றதாக ஒரு பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். வழக்கறிஞர் பேட்டி நளினியின் சுயசரிதை குறித்து அவருடை வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி ராஜீவ்காந்தி கொலை பின்னணியும், பிரியங்கா காந்தி சந்திப்பும் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். 600 பக்கம் 600 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வருகிற 24ம் தேதி சென்னை வடபழனியில் வெளியிடப்படுகிறது. இதில் நளினி கலந்து கொள்ள மாட்டார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் சினிமா இயக்குனர்கள், எழுத்தாளர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். பிறப்பு முதல் பிரியங்கா வரை... பிறந்து வளர்ந்தது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானது, போலீசாரால் விசாரிக்கப்பட்ட விதம், அவர் அனுபவித்த இன்னல்களை நளினி இந்த சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் வெளியானால் பெரிய மாற்றம் ஏற்படும் என்றார் புகழேந்தி.

இந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100 பேர் பலி

இந்தியாவில் உள்ள பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. இதில் இது வரை 96 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் கூறியது. காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லக்னோ,மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை ரெயில் பாதையாக இருப்பதால் பல ரெயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

மூன்று ,நான்கு முறை அதிர்ந்த ரெயில் -- பயணி பேட்டி
விபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த , கிருஷ்ண கேஷவ் என்பவர் , விபத்து நடந்த போது மூன்று நான்கு முறை பெரும் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததாகக் கூறினார்.

`` நான் எஸ்-12 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது காலை சுமார் 3 மணி இருக்கும்., நான் விழித்துக்கொண்டேன். . எங்கும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ஆனால் எங்கள் பெட்டியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை`` என்றார் அவர்.

மேலும் கூறிய கிருஷ்ண கேஷவ், ``நாங்கள் எல்லோரும் பெட்டியில் இருந்து இறங்கினோம். வெளியே ஒரே கும்மிருட்டாக இருந்த்து. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டிருந்ததையும், சில பெட்டிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருந்ததையும் பார்த்தோம்``, என்றார்.

` அக்கம்பக்கத்திலிள்ள கிராமங்களிலிருந்து பலர் வந்து சிக்கிக்கொண்ட பயணிகளை வெளியே கொண்டுவர உதவினர்,`` என்றார் கேஷவ்.

``போலிஸார் ஒரு மணி நேரத்துக்குப் பின் தான் வந்தனர். ஆம்புலன்ஸ்கள் வந்தன . ஆனால் எங்களுக்கு மேலும் உதவி வேண்டும்`` என்றார் கேஷவ்

பெண்சாமியாரின் அராஜகம் திருமணவீட்டில் கொலை

இந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒரு திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.

“புனிதப் பெண்” அல்லது “பெண் கடவுள்” என்று பொருள்படும் சாத்வி என்ற இந்தி மொழி சொல்லை தனது பெயரோடு இணைத்திருக்கும் சாத்வி தேவ தாக்கூர், நடன மேடைக்கு சென்று, அவர் விரும்புகிற ஒரு பாடலை ஒலிக்கவிட கேட்டு நடனமாடி, திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினரை பிரமிக்க வைத்ததாக இந்திய ஊடகங்கள் கூறின .

எல்லோரும் சூழ்ந்திருக்கும் வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கி அனைவரையும் அவர் பீதி அடைய செய்திருக்கிறார்.மணமகன் மற்றும் மணமகளின் தரப்பினர் அவரை நிறுத்துவதற்கு கேட்டுகொண்டது செவிடன் காதில் ஒலித்த சங்காகிப் போனது.

தவறுதலாக சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மணமகளின் 50 வயது அத்தை ஒருவரை தாக்கி அவர் கீழே சரிந்தவுடனும், மூன்று உறவினர் படுகாயமுற்ற பின்னரும்தான் இந்த துப்பாக்கிக்சூடு நின்றது.
அப்போது உருவான குழப்பத்தில் சாத்வியும், அவருடைய ஆறு பாதுகாப்பு பணியாளர்களும் தப்பிவிட்டனர்.
அவர்கள் ஏழு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தேடி வந்தனர்.

வெள்ளிக்கிழமை இந்த சாமியார் மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றம் 5 நாட்கள் போலிஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரது மெய்க்காப்பாளர்கள் இன்னும் பிடிபடவில்லை.
“நான் நிரபராதி, நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. இது எனக்கெதிராக போடப்பட்ட சதி”, என்று சரணடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சாத்வி கூறினார். “இந்த நிகழ்வில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்”, என்றார் சாத்வி.

அனைத்திந்திய இந்து மகாசபை என்ற சிறியதொரு இந்து மத நிறுவனத்திற்கு துணை தலைவராக இருக்கும் சாத்வி தாக்குர், இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல.
முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு, அவர்களை மலடாக்க வேண்டும் என்று கூறியது தொடர்பாக கடந்த ஆண்டு காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
"முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அதிக குழந்தைகளை பெற்றெடுப்பதை தடுக்கும் வகையில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கு அவர்களை மலடாக்குவது கட்டாயப்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

தங்களுடைய நாட்டில் சிறுபான்மையினரின் மதமாக மாறுகின்ற அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், இந்து மத பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்கிற இந்து மத தேசியவாத தலைவர்களின் பரிந்துரைகளை ஏற்றுகொள்வதாக சாத்வி தெரிவித்திருக்கிறார்.

"நீளமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கோட்டோடு நீங்கள் எவ்வாறு போட்டியிட முடியும்? அதற்கு பக்கத்தில் அதனைவிட நீள கோடு ஒன்றை வரைவதன் மூலம் தான்" என்று அவர் கூறியிருக்கிறார்.
இன்னொரு சர்ச்சைக்குரிய கருத்தாக, மசூதிகளிலும், தேவாலயங்களிலும், இந்து மத ஆண் மற்றும் பெண் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸேவின் சிலை ஒன்று ஹரியானாவில் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக டிஎன்எ செய்தித்தாள் சாத்வியை மேற்கோள் காட்டியுள்ளது.

சாத்வி சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல
’தங்கம் , துப்பாக்கி விரும்பி’
கர்னால் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமான பிராஸில், சாத்வி பிறந்து வளர்ந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அவரை பின்பற்றும் சிலரில் பெரும்பாலோர் உள்ளூர் கிராமவாசிகளாவர்.

நவீன வாழ்க்கைப்பாணியால் பிரபலத்தை தேடுபவராக சாத்வி அறியபடுகிறார் என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

தலை முதல் கால் வரை எப்போதும் காவி ஆடை அணிந்திருக்கும் 27 வயதான சாத்வி, பொன் ஆபரணங்கள் மற்றும் துப்பாக்கி விரும்பியாக தோன்றுகிறார்.

சகோதரர் ராஜீவ் தாக்குரால் நடத்தப்படும் அவருடைய முகநூல் பக்கம், சாத்வியை தேவா இந்திய பவுண்டேஷனின் இயக்குநர் என்றும், ஒரு தேசியவாதி என்றும் விவரிக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இந்து மகாசபையில் இணைந்தார்.
சாத்வியோடு அவர்களது கட்சியின் டெல்லியிலுள்ள தலைமையகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பயணம் மேற்கொண்டதாக ஹரியானாவிலுள்ள இந்து மாகா சபை மூத்த உறுப்பினர் தராம்பால் சிவாச் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

"நான் அவருக்கு சார்பாக பேசிய பின்னர் கட்சியின் தேசிய துணை தலைவராக சாத்வி நியமிக்கப்பட்டார்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"அவர் துப்பாக்கிகளோடு புகைப்படங்களை எடுத்துகொள்வது எங்களுக்கு மிகவும் அசௌகரியம் அளித்தது. அதனால், எங்களுடைய கொண்டாட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் சாத்வியை அழைப்பதை விரைவில் நிறுத்திவிட்டோம்".

சாத்வி ஓர் ஆயுத விரும்பி என்பதற்கு செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சோக சம்பவத்தின் காணொளி ஒரு சான்றாகும்.
இப்போது, சாத்வி தன்னை தானே சிக்கலுக்குட்படுத்திக்கொண்டதாகவே தோன்றுகிறது.

பழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு

புதிதாக வெளியிட உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன தொழில்நுட்பம் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள், முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம்.

இது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாமாம்.

பூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்கிறார்கள். இந்த தகவல் வதந்தியா, உண்மையா என்பதை நாளை வியாழக்கிழமை வங்கி திறந்ததும் நாமே போய் வாங்கி பார்த்துவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்.

மிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு

வடக்கு இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய போதைப்பொருள் கைப்பற்றுதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குளிர்பான தொழிற்சாலை ஒன்றில் இருபது மில்லியனிற்கும் அதிகமான மாண்ட்ராக்ஸ் என்று அழைக்கப்படும் போதைப்பொருள் மருந்தான "மெத்தாக்குவாலோன்" மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சோதனை தொடர்பாக, இந்திப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்கா மற்றும் மொசாம்பிக்கிற்கு இந்த போதைப்பொருட்கள் கடத்தப்படவிருந்தன என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

ஆப்ரிக்கா மற்றும் ஆசியா பகுதிகளில் நடத்தப்படும் இரவுநேர ஆட்ட நிகழ்ச்சிகளில் இந்த போதைப் பொருள் பிரபலமானதாகக் கருதப்படுகிறது.

Contact Info

  • Printing and typesetting industry. 
  • No 1123, Marmora Road, Glasgow, D04 89GR.
  • (801) 2345 - 6788 / (801) 2345 - 6789
  • This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…